குழந்தைகளுக்கு கதை சொல்லும் பழக்கம்

0
குழந்தைகளுக்கு கதை சொல்லும் பழக்கம்

குழந்தைகளுக்கு கதை சொல்லும் பழக்கம்
குழந்தைகளை இரவில் தூங்க வைப்பது நிறைய பெற்றோருக்கு கடினமான விஷயமாக இருக்கிறது. சில குழந்தைகள் நள்ளிரவு நெருங்கும் வரை தூங்காமல் விளையாடிக் கொண்டிருப்பார்கள். குழந்தைகள் நன்றாக தூங்கினால்தான் அவர்களின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். சுறுசுறுப்புடன் செயல்படவும் தூண்டும். இரவில் தூங்க அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு கதை சொல்லும் வழக்கத்தை பின்பற்றலாம். அது குழந்தைகளுக்கு நல்ல தூக்கத்தை ஏற்படுத்தி கொடுப்பதோடு அவர்களது ஆளுமைத்திறனையும் வளர்க்கும்.
உங்கள் பிள்ளைகள் புத்திசாலித்தனமானவர்களாகவும், அறிவுக்கூர்மையுடையவர்களாகவும் வளர விரும்பினால், தூங்க செல்லும் முன்பு கதை வாசிக்கும் பழக்கத்தை பின்பற்றவையுங்கள். நல்ல ஒழுக்கங்களை போதிக்கும் கதைகளைப் படிப்பதன் மூலம் நல்ல பண்புகளை பின்பற்றி வளர்வார்கள்.
குழந்தை பருவத்தில் இருந்தே நீங்கள் அவர்களுக்கு கதை சொல்லும் வழக்கத்தை தொடரலாம். அது அவர்களின் வளர்ச்சிக்கு உதவும். சிறந்த கற்பனைத்திறன், அறிவுத்திறன் கொண்டவர்களாகவும் வளர்வார்கள். நல்ல புத்தகங்களை தேடிப்பிடித்து படிக்கும் ஆர்வத்தையும் வளர்த்துக்கொள்வார்கள். குழந்தைகள் வளரும்போது அவர்களின் மூளையும் வளர்ச்சி பெறும். அப்போது கேட்கும் தகவல்களை சிறப்பாக உள்வாங்கினால் சரியான அறிவு வளர்ச்சியை பெறுவார்கள். அதற்கு கதை கேட்கும், படிக்கும் பழக்கம் உதவும்.
குழந்தைகள் பேசும்போது அவர்களின் உடல் மொழிகளையும், உதட்டு அசைவுகளையும் ரசித்து பாருங்கள். அது அவர்களின் அறிவாற்றல் செயல்பாடுகளை அதிகரிக்க உதவும். கதை வாசிக்கும் பழக்கம் கொண்ட குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கல்களை திறமையாக சமாளிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக விளங்குவார்கள். அவர்களின் தகவல்தொடர்பு திறனை மேம்படுத்துவதில் கதை சொல்லுதலும், கதை வாசிப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது. கதையில் வரும் சம்பவங்களை கேள்விகளாக கேட்டு பதில் சொல்வதற்கு ஊக்குவிப்பது அவர்களை தைரியமானவர்களாக உருவாக்க உதவும். மேலும் புதிய சொற்களை ஆர்வமாக கற்றுக்கொள்ளவும் முயற்சிப்பார்கள்.
குழந்தைகள் தினமும் வீட்டில் உள்ளவர்கள் பேசும் மொழியை நன்றாக உள்வாங்கிக் கொள்கிறார்கள். அதனால்தான் தாய்மொழியில் சரளமாக பேச தொடங்குகிறார்கள். எவ்வளவு அதிகமாக கேட்கிறார்களோ, அதற்கேற்ப அதிக சொற்களையும் கற்றுக்கொள்வார்கள். அதற்கு கதை கேட்கும் வழக்கம் துணைபுரியும்.
புத்தகம் வாசிப்பது நல்ல பழக்கம். குழந்தை பருவத்தில் இருந்தே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்தால் அறிவாற்றல் மேம்படுவதுடன் சிந்தனைத்திறனும், கற்றல் திறனும் மேம்படும். ஆரம்பத்தில் குழந்தைகளை கவரும் கார்ட்டூன் புத்தகங்களுடன் கதை சொல்லிக்கொடுக்கும் பழக்கத்தை தொடங்கலாம்.
குழந்தைகள் எப்போதும் புதிய விஷயங்களை காணவும், கற்றுக்கொள்ளவும் ஆர்வமாக இருப்பார்கள். பிரமாண்டமான படங்களுடன் கூடிய கதை விளக்கங்கள் அவர்களை எளிதாக கவர்ந்திழுத்துவிடும். அதில் இடம்பெறும் புதிய சொற்களையும் ஆர்வமாக படிப்பார்கள். எழுச்சியூட்டும் கதைகளைப் படிப்பது, அதேபோன்ற ஆளுமை திறன் கொண்டவர்களாக வளர்வதற்கு ஊக்கப்படுத்தும். எதையும் தைரியமாகவும், வெளிப்படையாகவும் எதிர்கொள்ள வும் தயாராகுவார்கள்.
Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions