பொதுவாக வீட்டில் இருந்து வெளியே கிளம்புகிறோம் என்றால் யாருக்கு என்ன நடக்கும் என்பது நம் கையில் இல்லை என்பதுதான் இன்றைய யதார்த்தம். இந்த நிலையில் வீட்டில் வருமானம் ஈட்டுபவருக்கு எடுக்கப்படும் ஆயுள் காப்பீடு பாலிசிகள்தான் அவருக்கு பிறகு அவருடையை குடும்பத்தை காப்பாற்றும் ஆதார சக்தியாக இருக்க முடியும். நாம் இந்த விஷயங்களை தெரிந்தே தவிர்க்க முடியாது.
இந்தியாவில் ஆண்டுக்காண்டு சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகம் முன்னிலை வகித்து வருகிறது. என்னதான் விதிமுறைகளுக்கு உட்பட்டு நீங்கள் வாகனத்தை ஓட்டினாலும், எதிரே வருபவர் உங்களைப்போல விதிமுறைப்படிதான் வாகனத்தை ஓட்டுவார் என்று சொல்ல முடியாது. இப்போதைய நமது வருமானத்தை போல, நமக்கு பிறகு நமது குடும்பத்துக்கு கிடைக்க வேண்டும் என்கிற புரிதலோடு காப்பீடு கவரேஜ் தொகை இருக்க வேண்டும். அதாவது நமக்கு பிறகு கிடைக்கும் காப்பீடு தொகையை கொண்டு நமது குடும்பம் இதே வாழ்க்கை தரத்தோடு வாழ வேண்டும். இதற்கு தற்போதைய ஆண்டு வருமானத்தைபோல 10 முதல் 15 மடங்கு தொகைக்கு காப்பீடு பாலிசி இருக்க வேண்டும். எனவே இந்த புரிதலோடு ஆயுள் காப்பீட்டை அணுக வேண்டும் என்கின்றனர் காப்பீடு ஆலோசகர்கள்.