மருத்துவமனைக்கு செல்லும்போது இந்த விஷயங்களை மறக்காதீங்க..

0
மருத்துவமனைக்கு செல்லும்போது இந்த விஷயங்களை மறக்காதீங்க..

மருத்துவமனைக்கு செல்லும்போது இந்த விஷயங்களை மறக்காதீங்க..
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இயல்பு நிலை ஓரளவுக்கு திரும்பத் தொடங்கி விட்டது. கொரோனா பீதியால் நீரிழிவு, இதய நோய் சார்ந்த பிரச்சினைகள், புற்றுநோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. தற்போது நாள்பட்ட நோய்கள் மட்டுமின்றி பிற வியாதிகளுக்கும் சிகிச்சை பெறுவதற்கு பலரும் மருத்துவமனைக்கு செல்லத்தொடங்கி இருக்கிறார்கள். கொரோனா பற்றிய பயம் காரணமாக போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் கடைப்பிடிக்கிறார்கள். இருப்பினும் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பும், சென்றுவந்த பின்பும் சில நெறிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமானது.

மருத்துவமனைக்கு சென்று முன்பு போல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இல்லாவிட்டாலும் சரியான திட்டமிடுதலுடன் செயல்பட வேண்டும். மருத்துவமனைக்குள் டாக்டரை சந்தித்து ஆலோசனையும், பரிசோதனையும் மேற்கொள்வதற்கு கால் மணி நேரம் முதல் அரை மணி நேரம் வரையே செலவிடுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பாகவே தொலைபேசியில் தொடர்பு கொண்டு மருத்துவரை சந்திப்பதற்கு ‘அப்பாயிண்ட்மெண்ட்’ வாங்கிவிடுவது நல்லது.

மருத்துவமனைக்கு செல்வதற்கு முக கவசம் அணிவதோடு கையுறையும் அணிந்து கொள்வது பாதுகாப்பானது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் முக கவசத்தை உபயோகிப்பதும் நல்லது. கையுறைகளை அணிந்திருந்தாலும் மருத்துவமனையில் தேவையில்லாமல் எந்த இடத்தையும் தொடக்கூடாது. மற்றவர்கள் பயன்படுத்திய பகுதிகள், பொருட்களை கவனமாக கையாள வேண்டும்.

மருத்துவரை சந்தித்துவிட்டு இதர பரிசோதனைகளை மேற்கொண்டு வீடு திரும்பியதும் அணிந்திருக்கும் முக கவசத்தை குப்பையில் போட்டுவிட வேண்டும். கைகளை சோப்பு கொண்டோ சானிடைசர் கொண்டோ கழுவிவிட வேண்டும். அதுபோல் அணிந்திருக்கும் கையுறை கள், உடைகளை வெந்நீரில் முக்கிவைத்து துவைப்பதும் நல்லது. வீட்டுக்குள் எந்தவொரு தொற்று கிருமியையும் கொண்டுவரவில்லை என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். காலணிகளையும் நன்றாக கழுவி சுத்தம் செய்துவிடுவது நல்லது. வீட்டின் உள் பகுதிக்குள் காலணிகளை கொண்டு வருவதையும் தவிர்த்துவிட வேண்டும்.

செல்போன்கள், வாகனங்களின் சாவிகள், பணம் செலுத்திய கார்டுகள் என மருத்துவமனைக்கு சென்றபோது பயன்படுத்திய பொருட்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்துவிடுவது நல்லது. பருவகால மாற்றத்தின்போது நோய்த்தொற்றுக்கு ஆளாவது இயல்பானது. காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய் பாதிப்புக்குள்ளானால் பீதியடையாதீர்கள். தயங்காமல் உடனே மருத்துவ ஆலோசனை பெற்றுவிடுவது நோயின் வீரியத்தை குறைக்க உதவும். எல்லா சமயங்களிலும் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். ஏதேனும் தவறு நடந்தால் பீதி அடையாதீர்கள். அதனை சரிசெய்வதற்கான வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

Share.

About Author

Leave A Reply

Copyright @ aatroram.com.Powered By Malaris Software Solutions